பாறுக் ஷிஹான்



அரச கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய பழக்கடை உரிமையாளருக்கு  சரீரப்பிணையில் செல்ல கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.


அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பழக்கடைகளின் நிலைமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு ஒன்றிற்கமைய செவ்வாய்க்கிழமை(15) சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குழு பிரதான வீதியில் உள்ள பழக்கடை ஒன்றினை திடீர் பரிசோதனை மேற்கொள்வதற்காக சென்றிருந்தனர்.

இதன் போது அப்பழக் கடையின்  உரிமையாளர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட நபர் தனது  கடையினை பரிசோதனை செய்ய வேண்டாம் என தடுத்ததுடன் வாக்குவாதத்திலும் அங்கு சென்ற சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான பொதுச் சுகாதார பரிசோதகர்களின் ஈடுபட்டு   கடமையை செய்ய விடாது  இடையூறு ஏற்படுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சாய்ந்தமருது பொலிசாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டதுடன்  பொலிசாரின் உதவியுடன் கடையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு  பின்னர்   குறித்த பழக்கடை உரிமையாளருக்கு எதிராக அன்றைய தினம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதன் போது குறித்த பழக்கடை உரிமையாளரை  ஒரு இலட்சம் ரூபா   சரீர பிணையில் கல்முனை நீதிவான் நீதிமன்று  விடுவித்துள்ளதுடன்  எதிர்வரும் மே 19ம் திகதி வரை வழக்கு மறுதவணை இடப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த  பழக்கடையை மீள்பரிசோதனை செய்து ஏதேனும் குறைபாடுகள் மற்றும் சுகாதார சீர்கேடுகள் காணப்படும் பட்சத்தில் கல்முனை நீதவான் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று  உத்தரவு  பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours