( வி.ரி. சகாதேவராஜா)

கல்முனைப் பிராந்தியத்தில் உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் பொது மக்களின் அடிப்படை உரிமை  மீறினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய  ஆணைக்குழு அலுகலகத்தில்  முறைப்பாடு செய்யுமாறு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ.சி.அப்துல் அஸீஸ்  தெரிவித்துள்ளார்.

பிராந்தியத்தில் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பும், தேர்தல் தினத்தன்று அல்லது தேர்தலின் பின்னர் அரச, நிருவாக, நிறைவேற்றுத் துறையினர் அடிப்படை உரிமையை மீறியதற்கான அல்லது மீறப்படுவதற்கான காரணங்கள் காணப்படுமாயின் முறைப்பாடு செய்ய முடியும்.

தேர்தல் காலத்தின் போது,  தேர்தல் சட்டங்கள், நாட்டின் ஏனைய சட்டங்கள், நாட்டின் அரசியல் அமைப்பிற்கு இணங்க அந்தத் தேர்தல் நடாத்தப்படுவதனை உறுதி செய்வதற்கு அரச உத்தியோகத்தர்கள் கடமைப்பட்டுள்ளனர். இது ஒவ்வொரு விடயத்திற்குப் பொறுப்பான அரச உத்தியோகத்தர்கள் அந்தச் சட்டங்களுக்கமைவாக தங்களது கடமைகளை நியாயமானதாகவும் பக்கச்சார்பின்றியும் செயற்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

1978ம் ஆண்டின் அரசியல் அமைப்பு யாப்பின்படி, மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை, சுதந்திரமாக அரசியலில் ஈடுபடும் உரிமை, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான உரிமைகளுடன் சட்டத்திற்கு முன் யாவரும் சமம் என்பதையும்  உறுதிப்படுத்தியுள்ளது.

ஓவ்வொரு அரச உத்தியோகத்தர்களும் அரசியல் அமைப்பிற்கு அமைவாக செயற்படுவதற்கு உறுதிமொழி செய்துள்ளனர். அரச உத்தியோகத்தர்கள் கொண்டுள்ள சட்ட ரீதியான கடமைகளையும், பொறுப்புக்களையும் தவறாகப் பயன்படுத்துதல் அல்லது நடவடிக்கை மேற்கொள்ளாமல் விடல் பக்கச்சார்பாக செயற்படல் அரசியல் அமைப்பு யாப்பின் அடிப்படை உரிமையினை மீறும் செயலாகும்.

அவ்வாறு மீறுகின்ற சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு எதிராக 1996ம் ஆண்டின் 21ம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு புலனாய்வுகள் மற்றும் விசாரணைகளை  நடாத்துவதற்கும் அவர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு ஆணைக்குழுவிற்கு அதிகாரம் உண்டு என தெரிவித்துள்ளார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours