பாறுக் ஷிஹான்

உள்ளூராட்சி சபைகள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவூட்டுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவூட்டல் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் இன்று(4)  சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

2025ம் ஆண்டு 03ம் இலக்க தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தும் சட்டம் தொடர்பாக சம்மாந்துறை, நாவிதன்வெளி, இறக்காமம், பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுகளின் வேட்பாளர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வானது  சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

திகாமடுல்ல மாவட்ட தேர்தல்கள்  தெரிவத்தாட்சி அதிகாரியும்,மாவட்ட செயலாளருமான சிந்தக அபேவிக்ரம அவர்களின் ஆலோசனை மற்றும் வழிக்காட்டுதல்களுக்கமைய  மாவட்ட உதவித் தேர்தல்கள் திணைக்களத்தினால் மேற்படி செயலமர்வு ஒழுங்கு செய்யப்பட்டது.

எதிர்வரும் மே மாதம் 06 ம் திகதி நடைபெறவிருக்கும் தேர்தலில் பிரசார அலுவல்களுக்கு செய்யப்படும் செலவுகள், கூட்டங்கள் நடத்துவதற்காக ஏற்படும் செலவுகள்,அச்சிட்டும் நடவடிக்கைகளுக்கான செலவுகள்,
அச்சு/ இலத்திரனியல் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் விளம்பரங்களினால் ஏற்படும் செலவுகள்,ஏனைய செலவுகள் சம்மந்தமாக வேட்பாளர்களுக்கு தெளிவூட்டப்பட்டது.

இச் செயலமர்வு  மாவட்ட தேர்தல்கள் பிணக்குகள் தீர்வகத்தின் பொறுப்பாளரும்,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளருமான எம்.ஏ முனாசீர் மற்றும் நிந்தவூர் பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.பி சுல்பிக்கார் ஆகியோர்கள் வளவாளர்களாக கலந்து கொண்டு வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவுகள் சம்மந்தமாக தெளிவுபடுத்தினர்.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை, நாவிதன்வெளி பிரதேச சபை மற்றும், இறக்காமம் பிரதேச சபைகளில் போட்டியிடும் அரசியல் கட்சி மற்றும் சுயேட்சை குழு வேட்பாளர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours