நூருல் ஹுதா உமர்

நாவிதன்வெளி பிரதேச சபையை வைத்துக்கொண்டு தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் மத்தியில் இனவாதமாக செயற்பட்டவர்களையும், முஸ்லிம் சமூகத்தின் காட்டிக்கொடுப்பர்களையும் மக்கள் இம்முறை நிராகரிக்க தவறமாட்டார்கள். நாங்கள் கடந்த காலங்களில் எப்போதும் இனவாதமாகவோ, பிரதேச வாதமாகவோ இருந்ததில்லை. இருக்கப்போவதுமில்லை என்பதை மக்கள் அறிந்து வைத்திருப்பதனால் இம்முறை நாவிதன்வெளி பிரதேச சபை ஆட்சியை தீர்மானிக்கும் பொறுப்பை மக்கள் எங்களிடமே தருவார்கள் என நாவிதன்வெளி பிரதேச சபைக்கு கால்பந்து சின்னத்தில் சுயட்சையாக போட்டியிடும் நளீர் பௌண்டஷன் நிறுவுனர் எம்.ஏ. நளீர் தெரிவித்தார்.
இன்று (05) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், கால்பந்து சின்னத்திற்கு வாக்களிக்க நாவிதன்வெளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் தயாராக இருக்கிறார்கள். கடந்த காலங்களில் நாங்கள் மக்களின் தேவையறிந்து சேவையாற்றியுள்ளோம். இதனால் மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். மக்களின் பசியறிந்து சேவையாற்றி பழகிய எங்களின் அணி மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. இதனால் கடந்த காலங்களில் பிரித்தாளும் அரசியல் செய்தவர்களை ஓரங்கட்டி எங்களுடன் மக்கள் ஒன்றிணைந்து வருகிறார்கள். சகல வாக்களிப்பு நிலையங்களிலும் அதிக வாக்குகள் பெற்று போனஸ் உட்பட பல ஆசனங்கள் பெற்று ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக நாங்கள் இருப்போம்.
கால்பந்து சின்னத்தின் ஒவ்வொரு வேட்பாளரும் மிகவும் பலம்வாய்ந்த மக்கள் செல்வாக்கு பெற்றவர்கள். அவர்களின் ஆலோசனைகளையும், கடந்த கால அனுபவங்களையும் கொண்டு மக்கள் பணிகளை வெற்றிகரமாக செயற்படுத்த உள்ளோம். மாற்றுக் கட்சிக்காரர்கள் போலியான பிரச்சாரம் செய்கிறார்கள். இது பொய் பிரச்சாரம் என்பதை மக்கள் அறிந்துவைத்துள்ளார்கள். பிரதேச சபைக்கு உள்ளூராட்சி திணைக்களத்தால் ஒதுக்கப்படும் நிதிகளுக்கு மேலதிகமாக இன்னும் பல வருமான மூலங்கள் எங்கள் வசம் உள்ளது. நாவிதன்வெளி பிரதேச சபையில் புதிய வருமான வழிகளை நாங்கள் உருவாக்கி மக்கள் நல திட்டங்களை முன்னெடுப்போம் - என்றார்
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours